மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை

மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம் குவாரி நிரம்பியது.

Update: 2023-09-02 21:56 GMT

மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம் குவாரி நிரம்பியது.

தொடர்மழை

விருதுநகர் மாவட்டம் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

மதியத்திற்கு மேல் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த சூழல் நிலவியது. தொடர்ந்து மிதமான மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியது. புளுகணூருணி சாலை, ெரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளமென ஓடிய மழை நீரினால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மழையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் நேற்று மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கனமழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீரோடு கலந்து கழிவுநீர் சாலையில் தேங்கியது.

ராஜபாளையத்தில் பெய்த கன மழையால் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துடன் சென்று வந்தனர்.

ஆலங்குளம்

ஆலங்குளத்தில் சிமெண்டு் ஆலைக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் சிமெண்டு உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கல் எடுத்துவிட்டனர். ஆலங்குளம், சுண்டங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, அண்ணாநகர், வசந்த் நகர், கலைஞர் நகர், இருளப்ப நகர், ஏ.டி.ஆர்.நகர், பெரியார்நகர், நேதாஜி நகர், ஜெ.ஜெ.நகர், எம்.ஜி.ஆர்.நகர். ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் இந்த குவாரி நீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைப்பதற்கும் இதனை பயன்படுத்துகின்றனர். நாளடைவில் குவாரியில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. இப்போது ஆலங்குளம் பகுதியில் தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்து வரும் மழையினால் குவாரி நிரம்பியது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்