வளி மண்டல சுழற்சி
கடலூர் மாவட்டத்தில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு ஆறுதலை அளித்தது.
இதற்கிடையில் தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
சாரல் மழை
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியதோடு, லேசான மழையும் பெய்தது. சற்று நேரத்தில் கன மழையாக பெய்தது. இருப்பினும் இந்த மழை விட்டு விட்டு இரவு 10.30 மணி வரை பெய்தது. இரவிலும் லேசான சாரல் மழைபெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழா நடைபெற்ற நிலையில், மழையால் மக்கள் பாதியில் எழுந்து சென்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிலர் கடைசி வரை பட்டிமன்ற நிகழ்ச்சியை கண்டு களித்துச் சென்றனர்.
மழை அளவு
இதேபோல் விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்த பட்சமாக வடக்குத்தில் 1 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பரங்கிப்பேட்டை- 11.2, மே.மாத்தூர்-8, லால்பேட்டை- 6, ஸ்ரீமுஷ்ணம்- 5.1, காட்டுமன்னார்கோவில்- 4, குப்பநத்தம் -3.2, கொத்தவாச்சேரி- 3, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலைநகர், புவனகிரி, சேத்தியாத்தோப்பு தலா -2, பெலாந்துறை -1.8, சிதம்பரம்-1.5, கலெக்டர் அலுவலகம் -1.4, கடலூர் -1.3.