நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. நெல்லை டவுன், பழைய பேட்டை, அபிஷேகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நெல்லை டவுன் 16-வது வார்டு பழனி தெரு முப்புடாதி அம்மன் கோவில் பகுதியில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் தூய்மை பணியாளர்கள் விரைந்து சென்று கழிவுநீரை அகற்றினர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.