எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்.ஐ.சி-யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்திமயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசு அரசின் இந்தித்திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் எல்.ஐ.சி இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை மத்திய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது. என தெரிவித்துள்ளார்.