திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு

திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Update: 2024-11-19 08:39 GMT

திருச்செந்தூர்,  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார். உதயகுமாரை காண அவரது உறவினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிசுபாலன் வந்துள்ளார். அப்போது சிசுபாலன், யானையின் அருகே நின்று செல்பி எடுத்ததுடன் யானையின் உடலில் தட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆக்ரோஷமடைந்த யானை, பாகனின் உறவினரை தாக்கியது. அப்போது தடுக்க வந்ததால் பாகனையும் யானை மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, மண்டபத்திற்குள் வைத்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் குடில் அருகில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

'யானை உணவு சாப்பிடவில்லை, தண்ணீர் குடிப்பதுடன் இலைகளை மட்டுமே உண்கிறது என  போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.  யானை தெய்வானையின் குடிலைச் சுற்றி தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் கோவில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்