நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழையால் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் மழையில் நனைந்து வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணிவரை பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:-
நாகை 5.20, திருப்பூண்டி 4.20, வேளாங்கண்ணி 8.20, தலைஞாயிறு 6.20, திருக்குவளை 4.30, வேதாரண்யம் 27.20,கோடியக்கரை 14.20.
வேதாரண்யம்
இதேபோல் வேதாரண்யம் பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்தது.
இதனால் மானாவாரி பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்து நெல் முளைத்து வரும் நிலையில் வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் அகஸ்தியன்பள்ளியில் உப்பு ஏற்றுமதி பணி பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் சுமார் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருமருகல்
திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனி பொழிவு நிலவி வருகிறது. திருமருகல், திட்டச்சேரி, அம்பல், திருப்புகலூர், ஏனங்குடி, போலகம், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி, குத்தாலம், நரிமணம் பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருமருகல் ஒன்றிய பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பெய்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.