முதுமலையில் பரவலாக மழை

கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீங்கி உள்ளது.

Update: 2023-04-23 18:45 GMT

கூடலூர்,

கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீங்கி உள்ளது.

பரவலாக மழை

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குளிர்ந்த காலநிலை நிலவும் நீலகிரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மேலும் வறட்சியால் வனப்பகுதியில் இருந்த பசுந்தீவனங்கள் காய்ந்தது. தொடர்ந்து முதுமலை, கூடலூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது.

தொடர்ந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலை கரையோரம் உள்ள கூடலூர், மசினகுடி பகுதியில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர் பகுதியில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

பசுமைக்கு திரும்புகிறது

இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. மேலும் காட்டுத்தீ ஏற்பட்டு புதர்கள், செடிகள் கருகிய இடங்களில் புற்கள் வளர தொடங்கி உள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீங்கி உள்ளது. சாரல் மழையும் பெய்வதால் பசுந்தீவனங்கள் நன்றாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பசுந்தீவன தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதை உறுதி செய்யும் வகையில் மான்கள், காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் முதுமலையில் அதிகளவு தென்படுகிறது. தற்போது குளுகுளு சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பரவலாக தொடர்ந்து மழை பெய்தால் கோடை வெப்பம் தணிந்து வனப்பகுதி பசுமைக்கு திரும்பும். இதன் மூலம் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதும் ஓரளவு குறையும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்