நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.
நாகர்கோவிலில் நேற்று மாலை 5.30 மணியில் இருந்து குளிர்ந்த காற்று வீசியது. 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அது பலத்த மழையாக சிறிது நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் வெள்ளமடம், குளச்சல், தக்கலை, குலசேகரம், பேச்சிப்பாறை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதே சமயம் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை தூறிக் கொண்டே இருந்தது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பேச்சிப்பாறை அணை
கடந்த 29-ந் தேதி முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதல் நாளில் வினாடிக்கு 1000 கன அடியாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் அடுத்த 2 நாட்களில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் 1000 கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர் பின்னர் 546 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 675 கன அடி நீர் வருகிறது. மேலும் பாசனக்கால்வாயில் வினாடிக்கு 381 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 401 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று முன்தினம் இந்த அணையிலிருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதில் 300 கன அடி தண்ணீர் புத்தன் அணை வழியாக பரளியாற்றில் சென்றது. மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே சுற்றுலாப் பயணிகள் இருவர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், பரளியாற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
குளிக்க தடை நீடிப்பு
பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் வினாடிக்கு 546 கன அடியாக குறைக்கப்பட்ட போதிலும் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இந்த நிலையில் 4-வது நாளாக நேற்றும் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலாப்பயணிகள் இறங்காதவாறு பேரூராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.