குமரியில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 35.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Update: 2022-08-08 20:09 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 35.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழை

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை காலை வரை நீடித்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இது சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது. இதனால் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தபடி பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றதை காண முடிந்தது.

கொட்டாரத்தில் 35.2 மில்லி மீட்டர்

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி கொட்டாரத்தில் அதிகபட்சமாக 35.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டர்) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 18.4, புத்தன் அணை- 5.2, சிற்றார் 1- 2.2, சிற்றார் 2- 4, மாம்பழத்துறையாறு- 8.4, முக்கடல் அணை- 9.2, பூதப்பாண்டி- 16.6, கன்னிமார்- 7.2, குழித்துறை- 6, மயிலாடி- 10.2, நாகர்கோவில்- 13, சுருளக்கோடு- 11, தக்கலை- 7.4, இரணியல்- 8, பாலமோர்- 14.4, ஆரல்வாய்மொழி- 7.4, கோழிப்போர்விளை- 2.8, அடையாமடை- 9.2, குருந்தங்கோடு- 15.8, முள்ளங்கினாவிளை- 12.4, ஆனைக்கிடங்கு- 6.2, கோழிப்போர்விளை 34.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

குருந்தன்கோடு, அடையாமடை, பூதப்பாண்டி, தக்கலை, குழித்துறை, கன்னியாகுமரி மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று காலை மழை கொட்டியது. மேலும் மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்ட இன்னும் ஒருசில அடிகள் மட்டுமே உள்ளது.

கண்காணிப்பு

பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே பெருஞ்சானி அணை 42 அடியை கடந்ததை எடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு கரையோர பகுதி பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அணைகளுக்கு நீர்வரத்து

அதேசமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,079 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 259 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,015 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 535 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 33 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீரும் வருகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 4 கன அடியும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 11.5 கன அடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்