தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த தயக்கம் ஏன்? சீமான் கேள்வி

சாதி வாரி கணக்கெடுப்பு நடந்து விட்டால் நீண்ட காலமாக இங்கு வாழ்பவர்கள் பூர்வ குடிமக்கள் அல்ல என்ற உண்மை தெரிந்து விடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.;

Update:2022-08-14 00:06 IST

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கதிர் ராஜேந்திரன், அன்பு தென்னரசு, வெற்றி குமரன், டாக்டர் இளவஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் பேசியதாவது:-

மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தமிழகத்தில் அது நடைபெறவில்லை. சமூக நீதி என்று பேசுபவர்கள் அதற்கான வழித்தடமாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாதது ஏன்?

சாதி வாரி கணக்கெடுப்பு நடந்து விட்டால் நீண்ட காலமாக இங்கு வாழ்பவர்கள் பூர்வ குடிமக்கள் அல்ல என்ற உண்மை தெரிந்து விடும். அதனால்தான் சாதிக்கு வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். யானையின் வலிமை தெரியாத காரணத்தால் தான் சிங்கம் இன்னும் ராஜாவாக இருக்கிறது.

எனவே தமிழகத்தில் அனைத்து சாதி மக்களும் முன்னேறும் வகையில், அவர்களின் நிலை என்ன? என்பதை அறிந்து கொள்ளும் வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும். டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இதற்காகத்தான் போராடி வருகிறார்கள். எனவே தமிழக அரசு நியாயமான இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்