டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க தாமதிப்பது ஏன்..? - ராமதாஸ் கேள்வி

120 நாட்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் தாமதிப்பது ஏன் என தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பினார்

Update: 2024-08-07 05:47 GMT

கோப்புப்படம்

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு இளநிலைப் பொறியாளர்கள் 49 பேர், இளநிலை வரைவு அலுவலர்கள் 49 பேர் என மொத்தம் 98 பேர் போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு 120 நாட்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் பல வகையான ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுத் தரப்பில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை அலுவலர் பணிகளுக்கு 1230 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் வெளியிடப்பட்டு, மே 27-ஆம் நாள் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் செப்டம்பர் 19-ஆம் நாள் வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் 2024 ஏப்ரல் 3-ஆம் நாள் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஒவ்வொரு பணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. 1230 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1132 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டு விட்டனர். ஆனால், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலைப் பொறியாளர்கள், இளநிலை வரைவு அலுவலர்கள் ஆகியோருக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆனைகள் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை அலுவலர் பணிகளுக்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகி விட்டது; முடிவுகள் வெளியிடப்பட்டு 11 மாதங்களாகி விட்டன. கலந்தாய்வு முடிந்து பணி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு 120 நாட்களாகி விட்டன. ஆனாலும் இன்னும் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் இன்னும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. அதனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணி ஆணைகள் முறைகேடாக வேறு எவருக்கேனும் வழங்கப்பட்டு விடுமோ? என்ற அச்சமும் அவர்களை வாட்டுகிறது.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி என்பது பெருங்கனவு ஆகும். அதற்காக பல ஆண்டுகளாக தயாரானவர்களுக்கு, தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாதது எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களின் வேதனைக் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை வரைவு அலுவலர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்