காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 3 தொகுதிகள் மாற்றம் ஏன்?

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட மொத்தம் 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.;

Update:2024-03-18 13:31 IST

சென்னை,

 தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில்  9  தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, இன்று தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

  1. திருவள்ளூர்,
  2. கடலூர்,
  3. மயிலாடுதுறை,
  4. சிவகங்கை,
  5. நெல்லை,
  6. கிருஷ்ணகிரி,
  7. கரூர்,
  8. விருதுநகர்,
  9. கன்னியாகுமரி

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகள் இந்த முறை மாற்றப்பட்டது. கடந்த முறை ஒதுக்கப்பட்ட தேனி, ஆரணி, திருச்சி ஆகிய தொகுதிகள் இந்த முறை ஒதுக்கப்படவில்லை. இந்த மூன்று தொகுதிகளுக்கு பதிலாக இம்முறை திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, திருச்சி தொகுதியை கேட்டு ம.தி.மு.க அடம் பிடித்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோவை களமிறக்க வைகோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேவேளையில், திருச்சி தொகுதி காங்கிரஸ் ஏற்கனவே வென்ற தொகுதியாகும்.

திருநாவுக்கரசு அந்த தொகுதியின் எம்.பியாக இருப்பதால், திருச்சியை விட்டுக்கொடுக்க காங்கிரசும் தயக்கம் காட்டியது. கடந்த சில தினங்களாக நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு திருச்சியை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது. திருச்சியை தவிர கடந்த முறை போட்டியிட்ட இரண்டு தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை ஒதுக்கப்படவில்லை. இதன்படி, தேனி, ஆரணி, திருச்சி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆரணி தொகுதியில் கடந்த முறை விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆரணிக்கு பதிலாக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி போட்டியிட வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட வாய்ப்புள்ளது.

தேனியில் கடந்த முறை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேனி தொகுதிக்கு பதிலாக தற்போது நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குவார் என்று தெரிகிறது. நெல்லை தொகுதியின் தற்போது எம்.பியாக ஞான திரவியம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்