இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?

நாம் அணியும் தானியங்கி கைக்கடிகாரம் தானாக இயங்கினாலும், அதன் தொடர் இயக்கத்திற்கு ஓர் இயக்கு விசை வேண்டும். நமது உடல் அசைவில் இருந்து அந்த விசையை அது எடுத்துக்கொள்கிறது. இல்லை என்றால் அது இயங்காமல் நின்றுவிடும். நமது உடலும் அப்படித்தான். அதற்கு விசை தேவைப்படுகிறது. அதற்குத்தான் உடற்பயிற்சி.

Update: 2023-02-10 19:25 GMT

தாத்தா உடற்பயிற்சி செய்தாரா?

அப்படி என்றால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் காலத்தில் 'ஜிம்' இருந்ததா? அவர்கள் உடற்பயிற்சிகள் செய்தார்களா? என்ற கேள்விகள் எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலும் சொல்லிவிடலாம். ஆனால் அப்போது பாசுமதி அரிசியும், பாலும் பாக்கெட்டுகளில் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் உழைப்பு ஓர் அங்கமாக இருந்தது.

தாத்தா நிலம் உழுதார். நெல் விளைவித்தார். பசு வளர்த்தார். பால் கறந்தார். தினமும் தேவைக்கு நெடுந்தூரம் நடந்தார். பாட்டி நெல் குத்தினார். ஆட்டு உரல், அம்மிக்கல் அரைத்தார். நீர் இறைத்தார்.

இன்று நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதே! தொழில்நுட்பம் வளரவளர, எந்திரங்களும் பெருக பெருக உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். அடுத்த தெருவில் இருக்கும் கடையில் மெழுகுவர்த்தி வாங்குவதற்குக்கூட நமது பையன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.

மன அழுத்தம்

நாமோ இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தனை வேலைப்பளுவையும் மூளையில் அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். இதனால் மன அழுத்தம். புதுப்புது நோய்களும் நம்மை தொற்றிக்கொள்கின்றன.

ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று பெருமையாக கிராமங்களில் பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டதால் அந்த நோய் வந்ததை அவர்கள் அறியவில்லை. இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப் பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி இவர்கள் கீழே என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.

ஆரோக்கியமான சமுதாயம்

ஆசிய மற்றும் அகில இந்திய அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப்பதக்கம் பெற்ற சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 59 வயதான எஸ்.சீனிவாசன்:- புதிய, புதிய நோய்கள் அவ்வப்போது வந்து செல்வதால், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. குறிப்பாக ஒரு சில இளைஞர்கள் துரித உணவுகளை எப்போதும் உட்கொள்வது மற்றும் மது அருந்துவது உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்களில் அடிமையாகி கிடக்கின்றனர். இவர்களை சரியான பாதையில் வழிநடத்த ஆள் இல்லாததால் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஆர்வம் காண்பிப்பதில்லை. சர்வதேச மற்றும் அகில இந்திய அளவில் நடக்கும் உடற்பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளும் அளிக்க முன்வர வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய முன்வருவார்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைத்து தரப்பு இளைஞர்களும் முன்வர வேண்டும்.

மூட்டு வலியை தவிர்க்கலாம்

புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் கார்த்திக்:- தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் சீராக இருக்கும். நடைபயிற்சியின் போது வியர்ப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடப்பதின் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நுரையீரல் செயல்பாடு சீராக இருக்கும். நடப்பதின் மூலம் வயது முதிர்வில் மூட்டு வலியை தவிர்க்கலாம். மேலும் எலும்பு வலுப்பெறும். இதய நோய், வாதம் போன்றவைகள் தவிர்க்கப்படும். வயது முதிர்வை தள்ளிப்போடலாம்.

சுறுசுறுப்பாக இருக்கும்

புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்த இருதயமேரி:- காலையில் பல் துலக்குவது, குளிப்பது போன்றவை எப்படி அத்தியாவசிய கடமையோ அதுபோல் நடைபயிற்சி மேற்கொள்வதும் அத்தியாவசிய ஒன்றாகும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என்பது பொதுவாக சர்க்கரை நோய் வந்தவர்கள்தான் செய்கின்றனர். அது தவறு. நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை எல்லா வயதினரும் முறைப்படி கடைப்பிடித்தால் எந்த நோயும் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்தி அதிகரிக்கும். அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

நடை பயிற்சி

அன்னவாசலை சேர்ந்த புரோஸ்கான்:- உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இப்போது எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், பளுதூக்குதல் உள்பட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அவர்களது உடலுக்கும், விளையாட்டுக்கும் தேவையான உணவு வகைகளை உண்பதால் உடலின் வலிமை மேலும் அதிகரிக்கிறது. தனியாக நடைப்பயிற்சி செய்வதை விட சில நண்பர்களை உடன் அழைத்து செல்வது நடைதிறனை அதிகரிக்க உதவும். வழக்கமாக உடற்பயிற்சி, நடை பயிற்சிக்கு செலவிடும் நேரத்தை பற்றி கவலைப்படாமல் நண்பர்களுடன் பேசியபடி அதிக தூரம் செல்லலாம். அப்படி நடக்கும்போது சோர்வும் சட்டென்று எட்டிப்பார்க்காது. அதிக கலோரிகளையும் எரித்துவிடலாம்.

சர்க்கரை, ரத்த அழுத்தம்

வடகாடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சரஸ்வதி:- தற்போதுள்ள சூழலில் அதிகாலை நேரங்களில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருவது மனநலம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் காக்கவும் பெரிதும் பயன்படுகிறது. முன்பெல்லாம் நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே அதிகளவில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது கிராம மக்கள் கூட டாக்டர்களின் ஆலோசனை பேரில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிலர் வெளியே சென்று நடைபயிற்சி மேற்கொள்ள கூச்சப்பட்டு வீடுகளுக்கு உள்ளேயே அதற்கான சாதனங்கள் மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். பெரும்பாலும் துரித உணவு பழக்க வழக்கங்கள் போன்றவை காரணமாக உடல் எடை அதிகரித்து, பின்னர் அதன் மூலமாக, ஏற்படும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமானோர் உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய ெதாடங்கி உள்ளனர்.

கட்டுமஸ்தான உடல்

விராலிமலையை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி:- உடற்பயிற்சி நிலையம் என்பது கட்டுமஸ்தான உடலை உருவாக்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் செல்லும் இடமாக நினைக்கிறார்கள். உடற்பயிற்சி நிலையம் என்பது அனைவருக்குமானது. இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு அனைத்துமே ஏதோ ஒரு வகையில் விஷமாக மாறி வருகிறது. உணவு பழக்கத்தை நாம் சரிவர கடைபிடிக்க வேண்டும். 40 வயதிற்கு மேல் நம்மை அறியாமலேயே முதுகுவலி, கால் வலி என வரிசையாக வர ஆரம்பித்துவிடும். அப்போது டாக்டரிடம் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து அவர்கள் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். உடற்பயிற்சி செய்து நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால் நமது எண்ணமும், செயலும் சீராக இருக்கும். தற்போது இளைஞர்கள் அதிகளவில் உடற்பயிற்சி நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். உடல்கட்டமைப்பிற்கான (பாடிபில்டிங்) போட்டியை தனிப்பட்ட அமைப்புகளே நடத்தி வருகின்றன. அதனை அரசு சார்பில் நடத்த நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்