பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்? என்று மாணவா்கள் கூறினார்.

Update: 2023-03-17 18:45 GMT

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த மதிப்பெண்களே அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும். அதாவது உயர்கல்வியின் கனவை நினைவாக்கும். இதனால் தான் மாணவர்கள் இந்த தேர்வை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு இந்த தேர்வு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.

கொரோனா காலமாக கடந்த 2 ஆண்டுகள் அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தற்போது பிளஸ்-2 வரை வந்து தேர்வு எழுதி வருகிறார்கள். சிலர் பாதியிலேயே பள்ளிக்கூடத்துக்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். இருப்பினும் பள்ளிக்கூடம் வந்து படித்து வரும் மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என பலரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அரசு பொதுத்தேர்வுக்கு தயார் படுத்தினர்.

தேர்வு எழுத வரவில்லை

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் நடந்த தமிழ் தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 32 ஆயிரத்து 595 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல் நாள் நடந்த தமிழ் தேர்வை 1519 பேரும், அதன்பிறகு நடந்த ஆங்கில தேர்வை 1,528 பேரும் எழுத வரவில்லை. மொத்தம் 3 ஆயிரத்து 47 பேர் எழுதவில்லை.

இது கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அதிகம் ஆகும். அதாவது பொதுத்தேர்வு வரலாற்றில் இதுவரைக்கும், இத்தனை பேர் தேர்வுக்கு வராமல் இருந்ததில்லை. இதனால் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் இத்தனை பேர் எதற்காக தேர்வு எழுத வரவில்லை என்ற விளக்கத்தை பள்ளி கல்வித்துறை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வருகிறது.

எண்ணிக்கை அதிகம்

இதில் பெரும்பாலான மாணவர்கள் 10-ம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கூடத்திற்கு வருவதில்லை. இருப்பினும் அவர்களின் பெயர்கள் நீக்காமல் பிளஸ்-2 வரை தொடர்கிறது. இடைநிற்றல் மாணவர்களை நீக்காமல் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தவிர தனித்தேர்வர்களும் தேர்வுக்கு வரவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

இது பற்றி தேர்வுக்கு வராத பிளஸ்-2 மாணவர்கள் மனம் திறந்து தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

விபத்து

ஆங்கில தேர்வு எழுதாத விருத்தாசலத்தை சேர்ந்த மாணவர்:-

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கு காரில் சென்ற போது, விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து ஒரு வித பதற்றம் இருந்து வருகிறது. இதனால் என்னால் படிக்க முடியவில்லை. இருப்பினும் தமிழ் தேர்வு எழுதினேன். அதன்பிறகு மன குழப்பமாக இருந்ததால், ஆங்கில தேர்வை எழுத முடியவில்லை. இருப்பினும் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன். மற்ற தேர்வுகளை எழுதுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கடலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் கூறுகையில்,

கொரோனாவில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். இப்போது படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. கடந்த 1 மாதமாக பள்ளிக்கூடத்திற்கு செல்ல வில்லை. இதனால் தான் தேர்வு எழுதவில்லை. மீண்டும் தேர்வு எழுதுவேனா என்று தெரியாது என்றார்.

கடலூர் அரசு பள்ளிக்கு தேர்வு எழுத வராத மாணவி கூறுகையில், நான் 10-ம் வகுப்பு படித்து விட்டு நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறேன். எனது பெயரை நீக்காமல் இருப்பார்கள். இதனால் தான் பிளஸ்-2 தேர்வுக்கு நான் வரவில்லை என்றார்.

பயந்து செல்லவில்லை

இருப்பு அரசு பள்ளி மாணவர் கூறுகையில்,

எனக்கு தந்தை கிடையாது. தாய் மட்டும் தான் என்னை படிக்க வைத்து வந்தார். சில நாட்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை எடுத்தேன். அதன்பிறகு பள்ளிக்கூடத்துக்கு சென்றால், ஆசிரியர்கள் ஏதாவது சொல்வார்களோ என்று பயந்து செல்லவில்லை. தற்போது நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன். தேர்வு எழுத என்னை ஆசிரியர்கள் அழைத்தார்கள். நான் தான் செல்லவில்லை என்றார்.

கருக்கை மாணவர் கூறுகையில், பிளஸ்-1 வரை கடலூரில் படித்து வந்தேன். பாடங்களில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல விரும்பவில்லை. இதனால் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டேன். தற்போது வேலைக்கு சென்று வருகிறேன் என்றார்.

படிப்பு வரவில்லைபிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதது ஏன்?

மனம் திறக்கும் மாணவர்கள்சேத்தியாத்தோப்பு பெரியக்குப்பம் மாணவர் கூறுகையில்,

பிளஸ்-2 படித்து வந்தேன். ஆனால் ஒவ்வொரு பாடத்திலும் பக்கம் அதிகமாக இருக்கிறது. படிக்கவே பயமாக இருந்தது. இதனால் இனி படிக்க வேண்டாம் என்று எண்ணி பெற்றோரிடம் கூறினேன். என்னை திட்டினார்கள். இருப்பினும் படிப்பு வரவில்லை என்றால் என்ன செய்வது என்று நான் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்