பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது?

பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-08-17 19:43 GMT

பொதுநல வழக்கில் தவறான தகவல் தெரிவித்தால் ஏன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

பட்டாவை ரத்து செய்ய கோரி மனு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், வின்சென்ட் உள்பட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மானாமதுரை பகுதிக்கு உட்பட்ட கிராம பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து சிலர் பட்டா பெற்றுள்ளனர். முறைகேடாக பெற்ற பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிவகங்கை மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் இதுகுறித்து அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்கள் தெரிவிக்கும் பகுதியில் புறம்போக்கு நிலத்தை பயன்படுத்திய வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகிவிட்டது. தற்போது மனுதாரர்கள் அதே கோரிக்கையுடன் பொதுநல வழக்கை தாக்கல் செய்து உள்ளனர். இது ஏற்புடையதல்ல என வாதாடினார்.

ரூ.5 லட்சம் அபராதம்

இதனை தொடர்ந்து நீதிபதிகள், ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கலான வழக்கு தள்ளுபடியாகியுள்ளது. மீண்டும் எவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளீர்கள்?.

ஒரு பொதுநல வழக்கில் ஒரு உத்தரவுதான் பிறப்பிக்க முடியும். மீண்டும், மீண்டும் மனு தாக்கல் செய்து கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பது மட்டுமில்லாமல், பொதுநல வழக்கு என்ற பெயரில் கோர்ட்டில் தவறான தகவலை தந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்போம் என நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்