மாதந்தோறும் மின்கட்டண முறையை ஏன் அமல்படுத்தவில்லை?

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின்கட்டண முறையை ஏன் அமல்படுத்தவில்லை என்று தி.மு.க. அரசுக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-12-09 20:17 GMT

மேலூர், 

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின்கட்டண முறையை ஏன் அமல்படுத்தவில்லை என்று தி.மு.க. அரசுக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.வல்லாளப்பட்டி பேரூர் கழக செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான உமாபதி தலைமை தாங்கினார்.

மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பம் மதுரை மண்டல செயலாளர் ராஜ்சத்யன், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

அமைப்புச்செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

மாதந்தோறும் மின்கட்டணம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒரு தடவை மின் கட்டணம் முறையை அமல்படுத்துவோம் என தேர்தலின்போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தும் அந்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. இப்போது 2 மாதத்துக்கு ஒரு தடவை கட்டணம், அதில் 100 யூனிட் இலவசம் என்கிறார்களே. ஒரு மாதம் ஒருவர் 300 யூனிட் பயன்படுத்தினால் அவருக்கு 100 யூனிட் இலவசம் என கணக்கிட்டால் அவர் 200 யூனிட்டுக்கு மட்டுமே பணம் கட்டினால் போதுமே. ஆனால் அதையே 2 மாதம் என ஆக்கி மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். ஏழை மக்கள் அன்றாட வாழ்வில் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். தி.மு.க. அரசால் மாதந்தோறும் 100 யூனிட்டுகள் இலவசமாக தரமுடியவில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சொல்கிறார்கள். ஏன் இணைக்க வேண்டும் ? அதனால் என்ன பயன் என அரசு சொல்லவில்லை. அதில் ஏகப்பட்ட குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் அருண், மாவட்ட பொருளாளர் அம்பலம், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகர் செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜேந்திரன், வெற்றிச்செழியன், குலோத்துங்கன், மேலூர் நகராட்சி கவுன்சிலர் திவாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்