ரபேல் வாட்ச் ரசீதை காட்ட அண்ணாமலை தயங்குவது ஏன்?-கே.எஸ்.அழகிரி கேள்வி

ரபேல் வாட்ச் ரசீதை காட்ட அண்ணாமலை தயங்குவது ஏன் என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-12-19 22:34 GMT

இரும்பாலை:

கே.எஸ்.அழகிரி பேட்டி

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சேலம் வந்தார். அவருக்கு கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து இரும்பாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி நடைப்பயணம் வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக எதிரிகளாக இருந்த சிவசேனா மற்றும் நிதிஷ்குமார் போன்றவர்களும் காங்கிரசுடன் இணையும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஒரு பொய்யான நம்பிக்கையை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 5,400 மதங்கள் உள்ளன. ஆனால் பாரதீய ஜனதா கட்சி, ஒரே நாடு, ஒரே இந்தியா, ஒரே மதம் என்று கூறி வருகிறது. இது 100 கோடி மக்களிடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். அரசியல் சாசனம் அனைவருக்கும் சம உரிமை உண்டு என கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசியல் சாசனத்தையே பா.ஜ.க. மாற்ற முயல்கிறது. மக்களிடம் இதனை வெளிப்படுத்தத்தான் ராகுல்காந்தி ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ரபேல் வாட்ச் ரசீது?

தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் முதல்-அமைச்சர் திருத்திக்கொள்கிறார். ஜனநாயக முறைப்படி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ராகுல்காந்தி நடைப்பயணத்தில் கமல் கலந்து கொள்ள இருப்பதை வரவேற்கிறோம். கமல் தேசிய உணர்வு படைத்தவர். அவருடைய நட்பை வரவேற்கிறோம்.

நான் ஒரு ஏழை விவசாயி என்று கூறும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ரூ.5 லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச் கட்டியுள்ளதாக கூறி இருந்தார். இதற்கு ரசீது காட்டுமாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டிருக்கிறார். அந்த ரசீதை அண்ணாமலை காட்ட தயங்குவது ஏன்?.

ரூ.150 கோடி செலவு

சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியாருக்கு விற்க உள்ளதாக தகவல் வருகிறது. ஆனால் நஷ்டத்தில் உள்ள இரும்பாலையை தனியார் எப்படி வாங்குவார்கள்? அவர்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும். தனியார் லாபம் ஈட்ட முடிந்தால் ஏன் மத்திய அரசு லாபம் ஈட்ட முடியாதா? இரும்பாலையில் ஆண்டுக்கு மின்சாரத்திற்கு மட்டும் ரூ.150 கோடி செலவாகிறது. இந்த கட்டணத்தை மிச்சப்படுத்த அங்கு சூரியஒளி மின்சாரம் கொண்டு வந்தால் ரூ.150 கோடி மிச்சமாகும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

முன்னதாக நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வசந்தம் சரவணன், மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்