தொலைதூர அரசு பஸ்களில் வசதிகள் இருந்தாலும் தனியார் சொகுசு பஸ்களை நாடுவது ஏன்? பயணிகள் கருத்து

தொலைதூர அரசு பஸ்களில் வசதிகள் இருந்தாலும் தனியார் சொகுசு பஸ்களை நாடுவது ஏன்? என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-10-14 18:45 GMT

தொலைதூர அரசு பஸ்களில் வசதிகள் இருந்தாலும் தனியார் சொகுசு பஸ்களை நாடுவது ஏன்? என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொலைதூர பயணம்

தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் போது சுகாதாரமாகவும், பயண களைப்பு தெரியாத வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பயணிகள் சொகுசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். இந்த வசதிகள் தனியார் சொகுசு பஸ்களில் கிடைப்பதால் தொலைதூர பயணங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்களில் பயணம் செய்வதையே பொதுமக்கள் விரும்பி வந்தனர். இந்தநிலையில் தனியார் சொகுசு பஸ்களில் உள்ள வசதிகளை போல் அரசு விரைவு பஸ்களிலும் வசதிகள் செய்யப்பட்டன.

அதன்படி முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ், படுக்கை மற்றும் இருக்கையுடன் குளிர்சாதன வசதி கொண்ட பஸ், கிளாசிக் பஸ், 2 படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பஸ் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு பஸ்கள் மாவட்டங்களுக்கு இடையேயும், வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கும், பழனியில் இருந்து திருச்சிக்கும், தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக சென்னை, திருச்சிக்கும் சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கட்டணம் குறைவு

திண்டுக்கல்லில் இருந்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 9.45 மணி வரை சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 7 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.465 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூருவுக்கு 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான கட்டணமாக ரூ.490 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து திருப்பதிக்கு இரவு 8 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பயணம் செய்ய ரூ.615 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே தனியார் ஆம்னி பஸ்களில் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பஸ்சுக்கு ரூ.1,892-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். தனியார் பஸ்களை காட்டிலும் அரசு விரைவு பஸ்களில் கட்டணம் குறைவாக இருந்தாலும் தனியார் பஸ்களில் கிடைக்கும் பல்வேறு வசதிகள், சலுகைகள் அரசு பஸ்களில் கிடைப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

சேவை குறைபாடு

மழைக்காலங்களில் பஸ்சின் மேற்கூரையை பொத்துக்கொண்டு மழைநீர் சொட்டு சொட்டாக ஒழுகுகிறது. பஸ்களின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளை வசதிக்கு ஏற்ப ஏற்றி, இறக்க முடியாதவாறு சிக்கிக்கொள்கிறது. பஸ்களின் இருக்கைகள் சேதமாகி உட்கார முடியாத வகையில் இருக்கிறது. குளிர்சாதன வசதி சரியாக இயங்குவது இல்லை. ஆனால் தனியார் பஸ்களில் குளிர்சாதன வசதி, களைப்பு தெரியாமல் அமரும், படுக்கும் வகையிலான இருக்கைகள், மின்விளக்கு, இருக்கை, ஜன்னல்களை மறைக்கும் துணி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகளில் எந்தவித குறைபாடும் ஏற்படாமல் தனியார் பஸ் நிறுவனத்தினர் பார்த்துக்கொள்கின்றனர்.

ஆனால் அரசு பஸ்களில் அப்படி இல்லை. குளிர்சாதன கருவி வேலை செய்யாமல் போகும் சமயங்களில் பயணிகள் வியர்வையில் குளித்தபடியும், சுத்தம் செய்யப்படாத இருக்கைகளில் வசதியாக அமர முடியாமலும் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. தொலைதூர பயணங்களில் இதுபோன்ற வசதி குறைபாடுகள் ஏற்படுவது பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதால் தான் தனியார் ஆம்னி பஸ்களில் பயணம் செய்வதை பெரும்பாலும் விரும்புகின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சமீபத்தில் பளுகல் நோக்கி சென்ற அரசு பஸ்சின் இருக்கை திடீரென பைசா கோபுரம் போன்று சாய்ந்ததால் அதில் இருந்த பயணி ஒருவர் இருக்கையில் இருந்து தவறி விழுந்து ரத்த காயம் அடைந்தார். இது அரசு பஸ்களின் தற்போதைய நிலையை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது. எனவே லாப நோக்கம் இல்லாமல் மக்கள் சேவையை மட்டுமே மனதில் கொண்டு இயங்கும் அரசு போக்குவரத்து துறை, தனியாருக்கு இணையான வசதிகளுடன் அரசு பஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு விரைவு பஸ் சேவை குறித்து திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

கூடுதல் நேரம்

திண்டுக்கல்லை சேர்ந்த லோகேந்திரன்:- விரைவான பயணத்துக்காகவே அரசு விரைவு பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்கிறோம். ஆனால் சில நேரங்களில் அரசு விரைவு பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களுடன் கூடுதலாக சில ஊர்களுக்கு சென்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் கூடுதல் நேரம் பஸ்சில் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல் குப்புசாமி:- தனியார் ஆம்னி பஸ்களில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் அதிவேகமாக செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் அதிவேகமாக சென்ற தனியார் ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது. எனவே தொலைதூர பயணத்தின் போது வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நமது பாதுகாப்பையே கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கு அரசு விரைவு பஸ் சேவையே சிறந்தது.

பயணிகளுக்கு இடையூறு

பழனியை சேர்ந்த சசி:- தனியார் சொகுசு பஸ்களில் இருக்கைகள், ஜன்னல் விரிப்புகள் என அனைத்தும் சுத்தமாக இருக்கும். அதில் பயணம் செய்யும் போது நாம் வீட்டில் இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கும். ஆனால் அரசு விரைவு பஸ்களில் அதுபோன்ற அனுபவம் பல நேரங்களில் கிடைப்பதில்லை. மேலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஆனால் தனியார் பஸ்களில் நாம் சொடக்கு போடும் நேரத்தில் நமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும்.

பழனியை சேர்ந்த விவேக்:- தனியார் ஆம்னி பஸ்களில் உள்ள இருக்கைகள் நிரம்பியதும். கூடுதலாக பயணிகளை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் 3 பேர் வரை அனுமதிக்கின்றனர். அதுவும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்களை இருக்கைகள் இல்லாத இடங்களில் அமர வைக்கின்றனர். ஆனால் அரசு விரைவு பஸ்களில் சில நேரங்களில் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் பஸ்களை போல் ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்த நித்யா:- தேனியில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களை விடவும் தனியார் பஸ்களில் கட்டணம் அதிகம். அரசு பஸ்களில் ரூ.510 கட்டணம் என்றால் தனியார் பஸ்களில் சாதாரண நாட்களில் ரூ.900 முதல் ரூ.1,200 வரையும், பண்டிகை காலங்களில் ரூ.1,200-ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரையும் டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அரசு பஸ்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. டிக்கெட் முன்பதிவை உறுதி செய்யும் பி.என்.ஆர். எண் செல்போனுக்கு உடனடியாக குறுஞ்செய்தியாக வருவதில்லை. பஸ் பயணம் மேற்கொள்ளும் நேரத்துக்கு சில மணிக்கு முன்பு வருவதால் முன்பதிவை உறுதி செய்ய முடியாமலும், டிக்கெட்டை ரத்து செய்ய முடியாமலும் தவித்து இருக்கிறேன்.

மேலும் டிக்கெட்டை ரத்து செய்ய முன்பதிவு மையத்துக்கு நேரில் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. இதுபோன்ற அலைச்சல், மன உளைச்சல் காரணமாக மக்கள் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்தாலும் சிரமமின்றி பயணம் செய்யலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, முன்பதிவில் உள்ள சிக்கல் மற்றும் பஸ்களை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும.

பரிதவிக்கும் நிலை

தேனியை சேர்ந்த லோகேஷ்குமார்:- அரசு பஸ்களிலும் தற்போது ஏ.சி. வசதி, படுக்கை வசதி எல்லாம் வந்துவிட்டது. ஆனாலும் பராமரிப்பில் தனியார் பஸ்களோடு ஒப்பிடும் போது அரசு பஸ்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. அரசு பஸ்களின் இருக்கையில் தலை சாய்க்கும் பகுதியில் தோலால் ஆன உறை போட்டு இருப்பார்கள். அது அழுக்கு படிந்து இருக்கும் என்பதால் அலர்ஜி ஏற்படும். ஆனால், தனியார் பஸ்களில் துணியால் உறை போட்டு இருந்தாலும் அவை முறையாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கும்.

தொலைதூர பயணங்களின் போது தனியார் பஸ்கள் சுகாதாரமான உணவகங்களில் நிறுத்தப்படும். ஆனால், பெரும்பாலான அரசு பஸ்கள் சாலையோர சுகாதாரக்குறைபாடு கொண்ட ஓட்டல்களில் நிறுத்தப்படுவதால் தரமற்ற உணவை சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்படுவோம். தனியார் பஸ் திடீரென பழுதாகி விட்டால் மாற்று ஏற்பாடுகளை பஸ் நிர்வாகம் உடனுக்குடன் செய்து கொடுக்கும். ஆனால், அரசு பஸ்கள் பழுதாகி விட்டால் நடு வழியில் பரிதவிக்கும் நிலைமை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்