முந்தைய காலங்களில் காங்கிரஸ் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியது ஏன்?-ப.சிதம்பரம் விளக்கம்

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், முந்தைய காலங்களில் காங்கிரஸ் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியது ஏன்? என்பதற்கு, ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

Update: 2023-02-10 18:37 GMT

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், முந்தைய காலங்களில் காங்கிரஸ் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியது ஏன்? என்பதற்கு, ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு முதலீடு குறைவு

தனியார் முதலீடு பல கோடி ரூபாய் வந்தால்தான் நாட்டின் வளர்ச்சி விகிதம் கூடும். உதாரணமாக 2022-2023-ல் ரூ.7½ லட்சம் கோடி மத்திய அரசு முதலீடு செய்யும் என்று சொன்னார்கள். ஆனால் கடைசியில் பட்ஜெட்டை திருப்பி பார்த்தால் ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் கோடிதான் முதலீடு செய்கிறார்கள். ரூ.22 ஆயிரம் கோடி அங்கே குறைகிறது. அடுத்த ஆண்டு ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்வதாக கூறுகிறார்கள். ரூ.7½ லட்சம் கோடியே முதலீடு செய்ய முடியவில்லை அப்படி இருக்க ரூ.10 லட்சம் கோடி எப்படி முதலீடு செய்வார்கள்?. ஆக இது போன்ற அறிவிப்புகள் எல்லாம் ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போலதான். மத்திய அரசால் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்ய முடியாது

ஏனென்றால் அதற்கு பல விதிமுறைகள் உள்ளன. ஆனால், ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்வதை வரவேற்கிறேன். இருந்தாலும் இதெல்லாம் முடியாத காரியம். உதாரணத்துக்கு 100 நாள் வேலை திட்டம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு குறைத்து செலவழிக்கின்றனர். அடுத்த ஆண்டாவது செலவழிப்பார்களா? என்றால் அதற்கும் வழி இருப்பது போல தெரியவில்லை.

உணவு, உரம் விலை

உதாரணமாக உணவு மற்றும் உரத்துக்கு தரும் மானியங்களை குறைத்து இருக்கிறார்கள். இதனால் உணவுப்பொருட்களின் விலை கூடும். உரங்களின் விலையும் கூடும். பெட்ரோலிய பொருட்களுக்கு மானியத்தை அறவே நிறுத்திவிட்டார்கள்.

உணவுக்கு உரங்களுக்கும் வழங்கப்படும் மானியத்தை குறைத்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதுபோல மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு நிதியை பகிர்ந்து கொடுப்பதில் அவர்கள் முதலில் சொல்லியது ஒரு தொகை. ஆனால், இந்த ஆண்டு தரப்போவது பல்லாயிரம் கோடி குறைவாகும்.

எனவே மத்திய அரசு அறிவிப்பது வேறு. ஆண்டு முடிவில் கணக்கெடுக்கும்போது வேறாக உள்ளது. இந்த ஆண்டு வளர்ச்சி மத்திய அரசு கூறியது போல 7 சதவீதம் இருக்காது. இந்த ஆண்டு வளர்ச்சி காலாண்டுக்கு, காலாண்டு குறையும். பொதுவாக வளர்ச்சி என்பது காலாண்டுக்கு காலாண்டு கூடும். ஆனால் இங்கு குறைகிறது. இந்த ஆண்டு உலகில் பல நாடுகளின் வளர்ச்சி குறையும் என்று கூறுகிறார்கள்.

வேலை வாய்ப்புகள் குறையும். பணவீக்கம் ஒரு அளவிற்குள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆனால் வேலை வாய்ப்புகள் வராது. ஆகவேதான் நாங்கள் எச்சரிக்கிறோம். எதிர்க்கட்சி எடுத்துதான் சொல்ல முடியும். அரசுதான் தன்னுடைய பாதையை திருத்திக் கொள்ள வேண்டும்.

எம்.எல்.ஏ.க்களை வாங்குகிறார்கள்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசியது உரையல்ல. குறிப்பாக எதிர்க்கட்சிகளை திட்டினார். காங்கிரஸ் கட்சி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை என்று கூறவில்லை முந்தைய காலத்தில் இருந்த சூழ்நிலையில், 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் அரசை தண்டித்து இருப்பார்கள்.

இவர்கள் 356-ஐ பயன்படுத்தி அரசை நீக்குவது கிடையாது. அதற்கு பதிலாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அண்மையில் விலைக்கு வாங்கியது கோவாவில் நடந்தது. 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கினார்கள்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தல். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள்.. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலா இருந்தார்கள்?.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 2024-ல் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அது தொடரட்டும். பா.ஜனதா என்ற பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு அ.தி.மு.க. வரட்டும். அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திலும் அதை மறுக்கவில்லை

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்