பிரதமரின் சென்னை நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது ஏன்? - பரபரப்பு தகவல்கள்

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-04-08 22:52 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும்-வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதப்பொருளானது.

ஆனால் பிரதமர் மோடி நிகழ்ச்சியை அண்ணாமலை புறக்கணிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

டெல்லியில் அண்ணாமலை

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநில பா.ஜ.க. தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே அவர் கர்நாடக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை தேர்வுசெய்யும் பணிக்காக டெல்லி சென்றார். அங்கு கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருடன் தங்கி கடந்த 2 நாட்களாக இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்.

'சென்னைக்கு வர வேண்டாம்'

வேட்பாளர் பட்டியல் பணி குறித்து பிரதமர் மோடியிடம் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதற்கு பிரதமர் அவரிடம், 'வேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணி மிகவும் முக்கியமானது. எனவே நீங்கள் டெல்லியிலே இருந்து அதில் கவனம் செலுத்துங்கள். சென்னைக்கு வர வேண்டாம்' என்று சொல்லி இருக்கிறார்.

எனவே பிரதமரின் அனுமதியை பெற்றுத்தான் அண்ணாமலை டெல்லியில் இருந்து கர்நாடக மாநில பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதேநேரத்தில் நேற்று முன்தினம் சென்னையில் பிரதமருக்கான வரவேற்பு ஏற்பாடுகளை கவனித்துவிட்டு, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிவிட்டுத்தான் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்