தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கை யார் விசாரிப்பது?

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்த வழக்குகளை அடுத்தகட்டமாக யார் விசாரிப்பது? என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வதற்கு பரிந்துரைப்பதாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2022-07-21 20:35 GMT

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்த வழக்குகளை அடுத்தகட்டமாக யார் விசாரிப்பது? என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வதற்கு பரிந்துரைப்பதாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தற்காலிக ஆசிரியர் நியமன விவகாரம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இடைக்கால தடை

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஷீலா பிரேம்குமாரி என்பவர், இதுதொடர்பாக ஏற்கனவே தொடர்ந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனால் மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் இந்த நியமன நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன..

தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

அப்போது நீதிபதி, இதே கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதித்துள்ளார். ஆனால் இந்த கோர்ட்டு, இந்த விவகாரத்தில் இடைக்கால தடை விதித்து உள்ளது.

எனவே வேறுபட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த வழக்குகளை அடுத்தகட்டமாக உரிய விசாரணை நடத்துவது தொடர்பான முடிவு எடுப்பதற்காக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது, என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்