பிரதமரின் 'பி.எம்.கேர்ஸ்' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் ‘பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.;
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிரதமர் மோடி அவர்களின் 'பி.எம் கேர்ஸ் ஆப் சில்ரன்' என்ற திட்டத்தின் கீழ் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான உதவித்தொகை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தாய் மற்றும் தந்தையை இழந்த 13 குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் திட்டத்தின் கீழ் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகைக்கான ஆணைகளையும், தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.65 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி, குழந்தைகள் நலக்குழு தலைவர் அக்ஸிலியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வேலைவாய்ப்பு, நிலப்பிரச்சினை, கடனுதவி, பசுமை வீடு என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 231 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது கலெக்டர் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 360 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், காதுகேளாத 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 காதொலி கருவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தனித் துணை கலெக்டர் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.