வெளுத்து வாங்குமா மழை? வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது

தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-21 01:55 GMT

சென்னை, 

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிக அளவில் மழையை பெரும். இந்நிலையில் தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாக தமிழகம் மழையை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 23-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை நாளை தமிழகத்தில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்