பள்ளிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தபோது சுற்றுலா வேன் கவிழ்ந்து மாணவன் உடல் நசுங்கி சாவு

பள்ளிக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த மாணவன் மீது சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் மாணவன் உடல் நசுங்கி பலியானான். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-14 19:11 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் முருகேசன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுடைய மகன் கவினேஷ் (வயது 14), கோபியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கவினேஷ் வழக்கமாக பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவதாக தெரிகிறது. அதன்படி வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக காந்திநகர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அவரின் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரும் பஸ் ஏற நின்று கொண்டு இருந்தார்.

உடல் நசுங்கி சாவு

இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். சுற்றுலா முடிந்தபின்னர் நேற்று காலை மீண்டும் ஆத்தூரை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

கோபி காசிபாளையம் காந்திநகர் பிரிவு அருகே வேன் வந்தபோது எதிரே ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதற்கு வழிவிடுவதற்காக வேனை டிரைவர் திருப்பியபோது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த கவினேஷ் மற்றும் குமாரசாமி மீது மோதி கவிழ்ந்தது. அப்போது குமாரசாமி விலகி ஓடிவிட்டார். கவினேஷ் வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் வேன் மோதியதில் குமாரசாமியும், வேனில் பயணம் செய்த 6 வாலிபர்களும் படுகாயம் அடைந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்