அந்தியூர் அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோதுவேன் கவிழ்ந்து 3 வயது சிறுமி பரிதாப சாவு
மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது அந்தியூர் அருகே வேன் கவிழ்ந்து 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 6 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
அந்தியூர்
மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றபோது அந்தியூர் அருகே வேன் கவிழ்ந்து 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 6 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேல்மருவத்தூர் கோவிலுக்கு...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி முரளி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலா. இவர்களுடைய மகள் மகாலட்சுமி (3).
இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவிலுக்கு செல்ல சம்பத்குமார், அவருடைய மகள் மகாலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த சுசீந்திரன் (18), கவுசிகா (22), லோகநந்தன் (22), கவின் (25), பாலமுருகன் (32), ராஜேஸ்வரி (47) உள்பட 18 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
விபத்து
இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வேன் மூலம் ஓம் சக்தி கோவிலுக்கு புறப்பட்டனர். வேனை சேலம் மாவட்டம் கொளத்தூர் பண்ணவாடியை சேர்ந்த கவுதம் (வயது 27) என்பவர் ஓட்டினார். வேன் முரளி அருகே உள்ள பட்டாளம்மன் கோவிலுக்கு சென்றது.
அங்கு பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து வேன் அங்கிருந்து புறப்பட்டது. பட்டாளம்மன் கோவிலை அடுத்த திருப்பத்தில் வேனை டிரைவர் திருப்பியபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் சாய்ந்தது. அப்போது அங்கிருந்த மரத்தில் மோதி வேன் விபத்துக்குள்ளானது.
சாவு
இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த அனைவரும் 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என அபயக்குரல் எழுப்பினர். அவர்களுடைய சத்தம் கேட்டதும், கிராம மக்கள் ஓடிச்சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும் இந்த விபத்தில் சிறுமி மகாலட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் சுசீந்திரன், கவுசிகா, லோகநந்தன், கவின், பாலமுருகன், ராஜேஸ்வரி ஆகியோர் படுகாயமும், மற்றவர்கள் லேசான காயமும் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுசீந்திரன், கவுசிகா, லோகநந்தன், கவின், பாலமுருகன் ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ராஜேஸ்வரி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற பக்தர்கள் சிகிச்சை பெற்று உடனே திரும்பினர்.
இந்த விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.