பெண்கள் பாதுகாப்பு என்று கண்ணீர் வடித்தவர் எங்கே? நடிகை குஷ்பு மீது அமைச்சர் கீதா ஜீவன் தாக்கு

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்புவை அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.

Update: 2023-07-21 23:51 GMT

சென்னை,

இதயம் உள்ள எவராக இருந்தாலும் மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை வெளிப்படுத்திய 'வீடியோ' காட்சிகளைத் தொடர்ந்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நெஞ்சத்தை உலுக்கி எடுக்கிறது. ஒரு பெண்ணாக, இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டு பதறுகிறேன். வன்மையாக கண்டிக்கிறேன்.

திரும்பி கூட பார்க்கவில்லை

மணிப்பூரில் வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மதவெறியை தூண்டி, மாநிலத்தை கலவர காடாக்கி, ரத்த ஆறு ஓடும்படி செய்திருக்கின்றன மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசும், மத்திய பா.ஜ.க அரசும்.

3 மாதங்களாக மணிப்பூரில் கலவரம் பற்றி எரியும் நிலையில், நாட்டின் பிரதமர் அந்த பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உண்மை நிலவரம், எத்தனை கொடூரமாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து வெளியாகும் 'வீடியோ' காட்சிகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் செய்தியாளர்களிடம் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான்.

மேடைகளில் பேசுபவர்கள், ஊடகங்களில் விவாதிப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் உள்ளிட்டோர் பொதுவான முறையில் பெண்களை குறித்துப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் விமர்சித்தாலும் உடனடியாக, தானாக முன்வந்து அதனை விசாரிக்கிறது தேசிய மகளிர் ஆணையம். இதுவும் அதன் கடமைதான்.

நடிகை குஷ்பு மீது தாக்கு

பேசுவதற்கே இத்தனை கடமை உணர்ச்சியுடனான செயல்பாடு என்றால், மணிப்பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் மீதான நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாததுமாக இருந்தது ஏன்?

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? பா.ஜ.க.விலும் மகளிர் பிரிவு இருக்கிறது. அதன் தேசிய அளவிலான தலைவராக இருக்கக்கூடியவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் நலனைக் கருதியும், மணிப்பூர் மாநிலப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய மகளிர் ஆணையம் தன் கண்களைத் திறந்து பார்த்து, கடமையை விரைந்து மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி (கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு கண்ணீர்மல்க பேட்டி அளித்திருந்தார். இதன் மூலம் குஷ்புவை அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்