உடன்குடி வாரச்சந்தை புதுப்பிக்கும் பணி தொடங்குவது எப்போது?

உடன்குடி வாரச்சந்தையை புதுப்பிக்கும் பணி தொடங்குவது எப்போது என்று வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Update: 2023-02-18 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மெயின் பஜார் நான்கு ரோடு சந்திப்பு அருகில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கட்கிழமைதோறும் செயல்படும் வாரச்சந்தை வளாகம் உள்ளது. மாவட்டத்தில் 2-வது பெரிய வாரச்சந்தை என்று அழைக்கப்படும் இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். சுற்றுப்புறப் பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கு வாங்கி செல்கிறார்கள்.

ரூ.1.98 கோடி ஒதுக்கீடு

தென்னை, வாழை, தேங்காய் உள்பட பல்வேறு விளைபொருட்களை விளைவிக்கும் விவசாயிகள் அவற்றை நேரடியாக கொண்டு வந்து வாரச்சந்தையில் விற்பனை செய்வார்கள். மேலும் ஆடு, கோழி போன்றவற்றையும் விற்பனை செய்து பயனடைவார்கள். இங்கு எந்த பொருளும் இல்லை என்று சொல்லாத அளவிற்கு அனைத்து பொருட்களும் தரமாகவும், மலிவாகவும் கிடைப்பதால் கூட்டம் அலைமோதும்.

இந்த வாரச்சந்தையை புதிய நவீன வடிவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அரசு சார்பில் ரூ.1 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த அனைத்து கொட்டகைகள், கட்டிடங்கள், கடைகள் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ெதாடர்ந்து புதிய பணிக்காக அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. ஆனால் சுமார் 6 மாதங்களாகியும் எந்தவிதமான பணியும் இன்றுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.

விரைவில் தொடங்க வேண்டும்

இதனால் வியாபாரிகள் மண்தரையில் கடை அமைத்தும், சாக்குப்பைகள், தார்ப்பாய்கள் போன்றவற்றை தரையில் விரித்தும், மேற்கூரையாக அமைத்தும் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும் பொருட்கள் வாங்க வருபவர்கள் என அனைவரும் வெயிலிலும், மழையிலும் நனைந்து செல்லும் அவல நிலையும் உள்ளது.

எனவே கடைகளை புதுப்பித்து கட்டும் பணியை தொடங்குவது எப்போது? என்று வியாபாரிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

உடன்குடியைச் சேர்ந்த ஆதவன்:- உடன்குடி வாரச்சந்தையில் புதிய வடிவமைப்பில் நவீன முறையில் கடைகள் கட்டுவதாக சொல்லி அனைத்து கடைகளையும், கூரைகளையும் இடித்து அப்புறப்படுத்தினார்கள். இதற்காக அடிக்கல் நாட்டு விழாவும் நடந்து சுமார் 6 மாதங்களாகிறது. ஆனால் எந்த ஒரு பணியும் தொடங்கவில்லை. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த கடைகளை உடனடியாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதார வளாகம்

உடன்குடி தேரியூரைச் சேர்ந்த நாராயணன்:- உடன்குடி வாரச்சந்தையில் சீக்கிரம் கடைகளை கட்டி முடித்து மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் வியாபாரமும் நன்றாக இருக்கும். மக்களும், வியாபாரிகளும் வந்து செல்ல வசதியாக இருக்கும். இங்குள்ள சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் கிடப்பில் போட்டு விட்டனர். ஆகவே கடைகளையும் கட்டி முடித்து, சுகாதார வளாகத்தையும் உடனடியாக திறக்க வேண்டும்.

உடன்குடி வாரச்சந்தை அருகில் கடை வைத்துள்ள மகாராஜன்:- உடன்குடி வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து நிறைவேற்றி திறக்க வேண்டும். இதன்மூலம் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

உடன்குடி நயினார்புரத்தை சேர்ந்த கோபால்:- வாரச்சந்தையை புதுப்பித்து கட்டுவது வரவேற்கத்தக்கது. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை உடனுக்குடன் முடிக்க வேண்டும். தற்போது வெயில் காலம் போல பகலில் கோடை வெயில் அடிக்கிறது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் பனி இறங்குகிறது. ஆகவே வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு கூறியதாவது:- உடன்குடி வாரச்சந்தையை புதிய மாடலில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா முடிந்து விட்டது. பணமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க உள்ளது. அப்போது, இங்குள்ள சுகாதார வளாகமும் சுத்தம் செய்து திறக்கப்படும். அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் சில பணிகளை முடிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. வேறு எந்த பிரச்சினையும் இல்லை. கால தாமதம் ஆனாலும் உடன்குடி வாரச்சந்தை புதுப்பொலிவுடன் காட்சி தரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்