மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே ரெயில்வே சுரங்கப்பாதை எப்போது அமைக்குப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;

Update:2022-12-20 13:39 IST

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் இருந்து மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலைக்கு விமான நிலைய ஆணையக குடியிருப்பு வழியாக செல்ல பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே கேட் கடவுப்பாதை இருந்தது. இந்த ரெயில்வே கேட் வழியாக பொதுமக்கள் வாகனங்களில் தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். இதனால் மின்சார ரெயில்கள் வரும்போது அடிக்கடி இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு வந்தது.

இதற்கிடையில் சென்னையில் ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், அதிக வேகமாக ரெயில்கள் செல்லவும் இதுபோல் உள்ள ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டு அந்த பகுதிகளில் சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

அதன்படி 2018-ம் ஆண்டு பழவந்தாங்கல்- மீனம்பாக்கம் இடையே உள்ள இந்த ரெயில்வே கேட்டும் மூடப்பட்டது. இதற்கு பதிலாக பொதுமக்கள், அருகில் உள்ள மீனம்பாக்கம் சுரங்கப்பாதையை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மீனம்பாக்கம் சுரங்கப்பாதை வழியாக சென்றால் கிண்டி நோக்கி வர சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. ஆனால் மூடப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் பழைய மீனம்பாக்கம் வழியாக விரைவாக செல்ல முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மூடப்பட்ட ரெயில்வே கேட் தண்டவாள பகுதியில் ரெயில்வே மூலமாக ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் 34 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணி முடிந்ததும் சென்னை மாநகராட்சியிடம் ரெயில்வே நிர்வாகம் ஒப்படைத்து சுரங்கப்பாதைகளை சாலைகளுடன் இணைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்து இருந்தனர்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் ஆள் நடமாட்டம் இல்லாததாலும், அந்த பகுதி புதர்மண்டி இருப்பதாலும் கஞ்சா புகைப்பது, மது அருந்துவது உள்பட சமூக விரோத செயல்களின் கூடமாக இந்த பகுதி மாறிவிட்டது. எனவே இந்த பகுதியில் உடனடியாக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்