தற்கொலை செய்த 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வது எப்போது?

இரணியல் அருகே தற்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வது எப்போது? என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-15 18:45 GMT

நாகர்கோவில்,

இரணியல் அருகே தற்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வது எப்போது? என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அண்ணன்-தங்கைகள் தற்கொலை

இரணியல் அருகே தாந்தவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 46), தொழிலாளி. இவருக்கு ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38) ஆகிய 2 சகோதரிகள் இருந்தனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகவில்லை. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் உள்ள ஹாலில் பாபு தூக்கில் தொங்கிய நிலையிலும், உஷா பார்வதி தரையிலும், சமையல் அறையில் ஸ்ரீதேவியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். 3 பேருடைய உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன.

இவர்கள் கடந்த 8 வருடங்களாக ஒரே வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இதற்கிடையே உஷா பார்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததாகவும், இந்தநிலையில் தான் 3 பேரும் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் சரிவர தெரியவில்லை. மேலும் இறந்த 3 பேரும் எங்களுக்கு உறவினர்கள் என கூறி யாரும் வரவில்லை. இதனால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் 3 பேருடைய உடல்களும் காத்திருக்கிறது.

போலீஸ் சார்பில் அடக்கம்

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

இரணியலில் அருகே நடந்துள்ள இந்த துயர சம்பவம் அனைவரது மனதையும் கவலையடைய செய்துள்ளது. ஒரே வீட்டில் அண்ணன் மற்றும் 2 தங்கைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட 3 பேருடைய உடல்களை வாங்க உறவினர்கள் யாரும் வரவில்லை. விதிமுறைப்படி 3 அல்லது 4 நாட்கள் உடல்கள் அங்கேயே வைக்கப்படும். அதன் பிறகும் யாரும் உரிமை கோர வரவில்லையென்றால் மாவட்ட போலீஸ் சார்பில் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்