திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது?

புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-02 19:08 GMT

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டையில் முக்கியமான பகுதியாக திருவப்பூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து சற்று சிறிது தூரத்தில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. திருச்சி-காரைக்குடி மார்க்க ரெயில்வே தண்டவாள பாதையில் இந்த கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட்டானது 5 ரோடுகள் சந்திக்கும் சாலையில் அமைந்துள்ளது.

அதாவது புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு சாலையும், திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ஒரு சாலையும், அன்னவாசல் செல்லக்கூடிய சாலையும், பூசத்துறை நோக்கி செல்லக்கூடிய சாலையும், திருவப்பூர் கீழ விதிகளுக்கு செல்லக்கூடிய சாலையும் சந்திப்பு பகுதியாகும். ஒரு நாளைக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் என 18-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கின்றன. இதுதவிர வாராந்திர ரெயில்கள், சிறப்பு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் கடந்து செல்வது உண்டு.

5 சாலைகள் சந்திப்பு

இந்த வழித்தடத்தில் ரெயில்கள் செல்லும் போது சாலையின் இருபுறமும் ரெயில்வே கேட் மூடப்படும். இந்த இடத்தில் ரெயில்வே கேட் கீப்பர் பணியில் இருந்து ரெயில் வரும் போது கேட்டை மூடுவதும், கடந்து சென்ற பின்பு கேட்டை திறக்கும் பணியிலும் ஈடுபடுவது உண்டு. ரெயில்கள் இந்த கேட்டை கடந்து செல்லும் வரை மூடப்பட்டிருக்கும் நேரத்தில் 5 சாலைகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும்.

கேட் திறக்கப்படும் போது இரு சக்கர வாகனங்கள் இருபுறத்தில் இருந்தும் முந்திக்கொண்டு செல்வது உண்டு. இதனால் கார்கள், லாரிகள், பஸ்கள் போன்ற வாகனங்கள் நகருவதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் வாகனங்கள் 5 சாலைகளில் இருந்து ரெயில்வே கேட்டை கடக்க முற்படுகிற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

மேம்பாலம்

இதற்கிடையில் இந்த வழியாக ஆம்புலன்ஸ்கள் அந்த நேரத்தில் வந்தால் சிக்கி கொள்கிறது. போக்குவரத்து நெரில் சீரான பின்பே ஆம்புலன்ஸ்கள் கடந்து செல்லக்கூடிய நிலையில் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கைவிடப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

இதனால் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். புதுக்கோட்டை நகருக்குள் நுழைவு மற்றும் வெளியே செல்லக்கூடிய சாலையில் முக்கியமான இடத்தில் இந்த கேட் அமைந்திருந்தால் ரெயில்வே மேம்பாலம் அவசியமாகுகிறது.

போதுமான இடம் உள்ளது

இது குறித்து திருவப்பூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன் கூறுகையில், '' நான் இந்த பகுதியில் பிறந்ததில் இருந்து வசித்து வருகிறேன். எனக்கு 50 வயது ஆகிறது. இந்த திருவப்பூர் ரெயில்வே கேட்டானது புதுக்கோட்டையில் முக்கியமான சாலையில் அமைந்துள்ளது. இதில் கேட் மூடப்படும் போதும், திறக்கப்படும் போது ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. குறிப்பாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் இந்த பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதற்கு நிரந்தர தீர்வு காண மேம்பாலம் அமைக்கப்படும் என அரசியல் கட்சியினர் அறிவிப்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போதும் கூட அறிவித்துள்ளார்கள். பணிகள் ஆரம்பித்து விடும் என்கின்றனர். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட போதுமான இடவசதி உள்ளது. சிலர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கலாம். பல்லாயிரக்கணக்கான மக்களின் நலனை பார்க்கும் போது இந்த பாலம் தற்போது அவசியம் தான் '' என்றார்.

வாகன ஓட்டிகள் சிரமம்

மகஸே்வரன்:- ''ரெயில்வே கேட் மூடப்படுகிற நேரத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக நிற்கும். கேட் திறந்த உடனே முந்தி செல்கிற போது சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பிரச்சினைகள் ஏற்படும் உண்டு. இதனால் கூடுதல் போக்குவரத்து பாதிப்படையும். வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதோடு, நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் பயணம் செய்யக்கூடிய பொதுமக்களும் அவதி அடைகின்றனர். மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் பணியை தொடங்க வேண்டும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்