திருக்குறளை படிக்கும்போது நம் வாழ்க்கை இனிமையாக அமையும்

திருக்குறளை படிக்கும்போது நம் வாழ்க்கை இனிமையாக அமையும் என புத்தக திருவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.

Update: 2023-07-15 20:52 GMT

தஞ்சாவூர்:

திருக்குறளை படிக்கும்போது நம் வாழ்க்கை இனிமையாக அமையும் என புத்தக திருவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.

நகைச்சுவை-சிந்தனை அரங்கம்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நேற்று 2-வது நாளாக புத்தக திருவிழா நடந்தது. மாலையில் நகைச்சுவை-சிந்தனை அரங்கம் நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேலு தலைமை தாங்கினார். இதில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு காலமெல்லாம் கைகொடுக்கும் குறள் என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, திருக்குறளில் இருந்து வாசிப்பை தொடங்கினால் சுலபமாக இருக்கும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் என்கிற ஞானி எழுதியது இப்போது எப்படி பொருத்தமாக இருக்கிறது என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை நமக்கு தந்துள்ள அவர் தனது பெயரை எங்குமே குறிப்பிடவில்லை. திருவள்ளுவர் தமிழனுக்கோ, இந்தியனுக்கோ மட்டுமல்லாமல், உலகத்தில் வாழும் அனைவருக்கும் சொந்தமானவர். நம்முடைய சொத்தான திருக்குறளை நம் வாழ்க்கைக்கு பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. குறளை மேலும், மேலும் படிக்கும்போது நம்முடைய வாழ்க்கையும் இனிமையாக அமையும் என்றார்.

குடும்பத்தினருடன் கலெக்டர் பங்கேற்பு

நிகழ்ச்சியில் நாளும் படிங்க, நாலும் படிங்க என்ற தலைப்பில் பேச்சாளர் சிவக்குமார் பேசினார். இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் நேற்று புத்தக திருவிழாவில் பங்கேற்றார். கலெக்டர் ஒவ்வொரு அரங்குகளாக நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்