ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில்தீயில் கருகியும் மீண்டும்துளிர்விடும் பனை மரங்கள

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தீயில் கருகியும் மீண்டும் துளிர்விடும் பனை மரங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-21 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தீயில் கருகிய பனை மரங்கள் மீண்டும் துளிர் விடுகின்றன. எனவே அவற்றை முறையாக பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீயில் கருகிய மரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏராளமான பனை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. கடந்த 1-ந்தேதி இரவில் அப்பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சுமார் 300 பனை மரங்கள், சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் போன்றவை தீயில் எரிந்து கருகின. மேலும் அருகில் உள்ள தோட்டத்திலும் தீ பரவியதில் 50 தென்னை மரங்களும் எரிந்தன.

தீ விபத்து நிகழ்ந்து 20 நாட்களைக் கடந்த நிலையில் மற்ற மரங்கள் துளிர்க்காத நிலையில், கருகிய பனை மரங்கள் மீண்டும் குருத்து விட்டு துளிர்க்க தொடங்கின. இது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முறையாக பராமரிக்க...

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏராளமான பனை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இவற்றில் காய்ந்து விழும் ஓலைகளை முறையாக அகற்றுவதில்லை. இதனால் அவற்றில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து சேதமடைகின்றன.

பொன்னங்குறிச்சி ஆற்றுப்படுகையில் தீயில் கருகிய சுமார் 300 பனை மரங்களில் பெரும்பாலானவை மீண்டும் துளிர்க்க தொடங்கி உள்ளன. தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக விளங்குவதால் கருகிய பனை மரங்களும் மீண்டும் துளிர்க்கின்றன. எனவே மக்களுக்கு அனைத்து நன்மைகளை விளங்கி 'கற்பக தரு'வாக விளங்கும் பனை மரங்களை பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்க வேண்டும்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்