மூலிகை பறிக்க சென்றபோதுகரடி தாக்கி பெண் படுகாயம்
ஆண்டிப்பட்டி அருகே மூலிகை பறிக்க சென்றபோது கரடி தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்தார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்வேல்புரம் பழங்குடியின காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செல்வி. இவர் அங்குள்ள வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் விறகு மற்றும் மூலிகைகளை பறித்து விற்பனை செய்து வருகிறார். நேற்று மாலை செல்வி, அங்குள்ள வனப்பகுதியில் மூலிகை செடி பறிக்க சென்றார். அப்போது வேலப்பர் கோவில் மலையில் உள்ள ஐந்துகல் வனப்பகுதியில் சென்ற போது, புதரில் இருந்து திடீரென கரடி ஒன்று பாய்ந்து வந்தது. அந்த கரடி செல்வியை பலமாக தாக்கியது.
இதில் கரடி கடித்து, நகங்களால் கீறியதால் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கரடியிடம் இருந்து தப்பித்து மலை அடிவாரத்திற்கு வந்த செல்வி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அப்பகுதியினர் காயமடைந்த செல்வியை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.