புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு சிதம்பரம் ஆஸ்பத்திரியில் 3 மணிநேரம் சிகிச்சை
புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சென்ற போது ஓடும் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிதம்பரம் ஆஸ்பத்திரியில் 3 மணிநேரம் சிகிச்சை பெற்றார்.
அண்ணாமலைநகர்,
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி, அவர் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் ஏறி பயணம் மேற்கொண்டார்.
நள்ளிரவு 2 மணியளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது ரத்த அழுத்தம் அதிகரித்து, அதிக அளவில் வியர்த்துள்ளது. உடனே அமைச்சர் இதுகுறித்து தனது உதவியாளரிடம் தெரிவித்துள்ளார்.
3 மணி நேரம் சிகிச்சை
இதையடுத்து அமைச்சரின் உதவியாளர், சிதம்பரம் ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிதம்பரம் வந்ததும், அங்கு தயாராக இருந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் அமைச்சர் மெய்யநாதனை காரில் ஏற்றி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதும், பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சுமார் 3 மணி நேரம் மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பில் இருந்தார்.
உடல்நிலை சீரானது
இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மருத்துவமனைக்கு வந்து அமைச்சரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார். இதற்கிடையே அமைச்சரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அமைச்சரின் உடல்நிலை சீரானதையடுத்து கார் மூலம் காலை 7 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவக் குழுவினர் 2 ஆம்புலன்சுகளில் அமைச்சரின் காரை பின்தொடர்ந்து சென்றனர். ரெயிலில் வந்த அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.