தென் மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

தென் மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2023-06-06 15:17 GMT

கோப்புப்படம்

சென்னை,

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரபிக்கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். மேற்கு திசையில் இருந்து காற்றும், மழையும் கேரள பகுதிகளில் இருக்கும் பட்சத்தில், தென் மேற்கு பருவமழை தொடங்குவதாக அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் இந்த புயல் காரணமாக கேரள பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு திசை காற்று அங்கு வீசத் தொடங்கியிருப்பதாகவும் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்னும் ஓரிரு நாட்களில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி போன்ற பகுதிகளில் மழை இருக்கும். மற்ற இடங்களில் ஓரளவுக்கு மழையை எதிர்பார்க்கலாம். தென் மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு தான், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கும். 

Tags:    

மேலும் செய்திகள்