முன்னேறிய மாவட்டமாக மாறுவது எப்போது?

முன்னேறிய மாவட்டமாக மாறுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-08-13 19:06 GMT

மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை தேசிய அளவில் அடையாளம் காணப்பட்ட 112 பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக கண்டறிந்தது.

அதாவது இந்த மாவட்டத்தை தத்தெடுத்து இந்த மாவட்டத்தில் பல்வேறு மத்திய அரசு திட்ட பணிகளை நிறைவேற்றி 3 ஆண்டுகளில் முன்னேறிய மாவட்டமாக உருவாக்க வழி வகுக்கப்படும் என்றும் உறுதியளித்தது.

பொறுப்பு அதிகாரி

மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதியில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவு, தொடக்க கல்வியின் தரம் குறைவு, ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் குறைவு என சுட்டிக்காட்டி இவற்றில் முன்னேற்றத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக 2022-ம் ஆண்டிற்குள் இந்த மாவட்டம் முன்னேறிய மாவட்டமாக மாற்றப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது. அதற்கு என விருதுநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற தேர்தல்

கடந்த நிதியாண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பல்வேறு திட்ட பணிகள் நடப்பு நிதி ஆண்டு வரை இன்னும் முடிவடையாத நிலை உள்ளது. ஆனால் திட்டப்பணிகளை மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தான் விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

வருகிற நாடாளு மன்ற தேர்தலுக்குள் மத்திய அரசு மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்களை ஏமாற்றுகின்றனர்

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மாணிக்கம்தாகூர் எம்.பி.:-

விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்குவோம் என்பது வெறும் வார்த்தை ஜாலமாகவே தொடர்கிறது. முதலில் மத்திய நிதி மந்திரி வந்தார். அதன்பின் இணை மந்திரி வந்தார். தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் வந்து சென்றுள்ளார்.

ஆனால் மாவட்டம் முன்னேறிய பாடு இல்லை. திட்டப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் நிதிஒதுக்கீடு தேவை. அதற்கு முன் வராமல் திட்ட பணிகளை மேற்கொள்வோம் என்று கூறுவது மாவட்ட மக்களை ஏமாற்றுவதாகும்.

வெறும் அறிவிப்பு

விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன்:-

மத்திய அரசு அறிவித்தபடி மாவட்டம் முன்னேறிய மாவட்டமாக உருவாகவில்லை. எம்.பி. நிதியில் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யாத நிலையில் மாநில அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் கிராமங்களில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனது தொகுதியில் சத்திரரெட்டியட்டி கிராமத்தில் மேம்பாட்டு பணிகள் எனது தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்தும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெறும் அறிவிப்புகளால் மட்டும் மாவட்டம் முன்னேறி விடாது.

பொய்த்து போன விவசாயம்

உடையானாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வைரலட்சுமி:-

உடையானாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் முழுவதும் பொய்த்து விட்டது. தற்போது தமிழக அரசு எங்கள் பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்துள்ளது. எங்கள் பகுதியில் ஏதாவது தொழிற்சாலை உருவாக்கினால் இந்த பகுதி மக்கள் பிழைப்பு நடத்த ஏதுவாக இருக்கும். எங்கள் பகுதியை முன்னேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

இசலி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்:-

நரிக்குடி ஒன்றியம் மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள மக்கள் பிழைப்புக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது நரிக்குடி பகுதி விளைச்சல் குறைவான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நரிக்குடி பகுதியை முன்னேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மத்திய அரசு அறிவித்த படி விருதுநகர் மாவட்டத்தை விரைவில் முன்னேறிய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். 

Tags:    

மேலும் செய்திகள்