மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்

Update: 2023-01-30 18:45 GMT

மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 52 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 25 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைக்கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பாக 18 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 42 மனுக்களும், அடிப்படை வசதிக்கோரி 11 மனுக்களும், மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக குத்தாலம் தாலுகா, பனங்கரை மேட்டுத்தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி, தேன்மொழி ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர் என்பதை 28.1.2023-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளிவந்ததை அறிந்த கலெக்டர், நேற்று சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என உறுதியளித்தார்.

சக்கர நாற்காலிகள்

இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்