பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்ததற்கான காரணம் என்ன? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்ததற்கான காரணத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.;

Update: 2023-06-10 06:21 GMT

சென்னை,

முன்னதாக 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு மாற்றப்பட்டு 7-ந் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்ததற்கான காரணத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக அன்பில் மகேஷ் கூறியதாவது:-

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் ஒவ்வொரு பாடத்தின் வகுப்பிற்கும் 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறையை போக்க சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்த திட்டமிடபட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிப்பு மட்டுமில்லாமல் சிலம்பம் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்