நெய்வேலியில் என்எல்சி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-13 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலி வட்டம் 7 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு மரத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் இதுபற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை கைப்பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

என்.எல்.சி. தொழிலாளி

விசாரணையில், அவர் வட்டம் 3 பகுதியை சேர்ந்த ராஜசேகர்(வயது 59) என்பதும் என்.எல்.சி. நிரந்தர தொழிலாளியான இவர் சுரங்கம் 1-ல் மண் வெட்டும் எந்திரத்தின் டிரைவர் என்பதும், இன்னும் 4 மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மனைவி தேவகியிடம் காய்கறி வாங்க சென்று வருவதாக கூறிச்சென்றவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதும் தெரியவந்தது. இதனிடையே அவர் பிணமாக தொங்கிய இடத்தின் கீழே கடிதம் ஒன்று கிடந்தது.

கடிதத்தில்...

கடிதத்தை போலீசார் கைப்பற்றி பார்த்தபோது, ராஜசேகர் எழுதிய கடிதம் என்பதும், அதில் காவல் துறை அதிகாரி அவர்களுக்கு.. நான் சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், எனது சாவுக்கு நானே தான் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்