போலீஸ் விசாரணையில் மரணம் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்னென்ன? -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் மரணம் அடைந்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் மரணம் அடைந்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கல்லூரி மாணவர் சாவு
கடந்த 2020-ம் ஆண்டில் மதுரை பேரையூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் ரமேஷ் மர்மமான முறையில் இறந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடகோரி அவரது சகோதரர் சந்தோஷ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை இந்த வழக்கில் பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
விதிகளை பின்பற்ற வேண்டும்
இந்த வழக்கில் சந்தேக மரணம் என புகார் எழுந்த பிறகு, பிரேத பரிசோதனையை மதுரை அல்லது தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடத்தாமல், அவசர அவசரமாக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடத்தியது ஏன்?
காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார் என புகார் கூறப்பட்டுள்ள நிலையில், ஏன் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை? என கேள்வி எழுந்து உள்ளது.
சந்தேக மரணங்கள் என புகார் எழுந்தால் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். காவல்நிலையம், சிறைச்சாலை உள்ளிட்டவைகளில் நிகழும் மரணங்களில், சந்தேகமரணம் என புகார் எழுந்தால், பிரேத பரிசோதனை நடக்கும்போது, உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும்.
வீடியோ பதிவு
பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவு முடிந்த உடனேயே, இறந்தவரின் பெயர் உள்ளிட்ட வழக்கு தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், பொதுவான விவரங்கள், பிரேத பரிசோதனை விவரங்கள் போன்றவை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு, பிரேத பரிசோதனையை நடத்தும் தடயவியல் மருத்துவ நிபுணர், மெமரி கார்டுடன் வீடியோ கேசட்டை உடனடியாக சீல் செய்து, தேவையான அனைத்து விவரங்களுடன் உடனடியாக வழக்கு விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர், அதை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் மற்றும் வீடியோ ஆகியவை ஒரே நேரத்தில் இறந்தவரின் குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இதுவே இறந்தவரின் குடும்பத்தினர் உடனடியாக சட்டப்பூர்வ தீர்வுகளை நாடுவதற்கு உதவும்.
பாதுகாக்க வேண்டும்
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, இறந்தவரின் குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசு அல்லது பிரதிநிதிகள் ஐகோர்ட்டுக்கு செல்வதாக எழுத்துப்பூர்வமாக அளித்தால், இறந்தவரின் உடல் குறைந்தது 48 மணிநேரம் பிணவறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்குள் தகனம் செய்தோ அல்லது வேறு வழியிலோ உடலை அப்புறப்படுத்தினால், இரண்டாவதாக பிரேத பரிசோதனை நடத்துவதன் நோக்கம் பயனற்றதாகிவிடும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.