சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் நடத்தப்படும் கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்? - ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசின் வாயிலாகவே நடத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-11-27 07:48 GMT

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரட்டப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய விவரங்கள் திரட்டப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதன் சமூகநீதித் தேவைகளை வலியுறுத்தியிருக்கிறார் போக்குவரத்து அமைச்சர். அரசின் நிலைப்பாடு மிகவும் சரியானதுதான். அரசுப் பேருந்துகளில் சமூகநீதியைக் காக்கும் அணுகுமுறை ஒட்டுமொத்த மாநிலத்திலும் சமூகநீதியை காப்பதில் கடைபிடிக்கப்படாதது ஏன்? என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் வினா.

நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில் திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவேதான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவதுதான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல் உள்ளது?

கொள்கை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக பீகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறிவிட்ட நிலையில், மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா? மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதல்-அமைச்சர், சமூகநீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?

மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல் இப்போது நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன் நோக்கத்தையும், தேவையையும் புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசின் வாயிலாகவே நடத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்