கடலில் குளித்த 3 மாணவர்கள் கதி என்ன?

உவரி அருகே கடலில் குளித்த 3 மாணவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-08-15 19:56 GMT

திசையன்விளை:

உவரி அருகே கடலில் குளித்த 3 மாணவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பள்ளி மாணவர்கள்

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ராகுல் (வயது 14). அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13), ரேஷன் கடை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆகாஷ் (14).

நவ்வலடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ராகுல், ஆகாஷ் ஆகியோர் 9-ம் வகுப்பும், முகேஷ் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

கடலில் குளித்தனர்

இவர்கள் 3 பேரும் நேற்று மாலை 5.30 மணி அளவில் நவ்வலடி கடலில் குளிக்க சென்றனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உறவினர்களின் உதவியுடன் அந்த பகுதியில் தேடி பார்த்தனர்.

அப்போது நவ்வலடி கடற்கரையில் அவர்கள் அணிந்திருந்த உடைகள், செருப்புகள் மட்டும் கிடந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் காணவில்லை.

போலீசில் புகார்

எனவே, அவர்கள் கடலில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்களின் உறவினர்கள், உவரி கடலோர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில், கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி, சுகுமாரன் மற்றும் போலீசார் படகு மூலம் காணாமல் போன மாணவர்களை தேடி கடலுக்கு சென்றனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில், காணாமல் போன 3 மாணவர்களுடன் மேலும் ஒரு மாணவர் குளிக்க சென்றதும் தெரியவந்தது.

சபாநாயகர் அப்பாவு

கடல் அலையில் சிக்கிய மாணவரை மற்ற 2 மாணவர்கள் காப்பாற்ற முயன்றதாகவும், அப்போது அவர்கள் 3 பேரும் கடல் அலையில் சிக்கியதை பார்த்து பயந்து தப்பி வீட்டுக்கு வந்ததாகவும் அந்த மாணவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்களும், உவரி போலீசாரும் விரைந்து வந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். மேலும், தகவல் அறிந்த சபாநாயகர் அப்பாவு இரவு அங்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார்.

கதி என்ன?

இருந்தபோதும், 3 மாணவர்களின் கதி என்ன? என்று தெரியாததால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். நவ்வலடி கிராம மக்களும் கடற்கரையில் சோகத்துடன் திரண்டு உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்