மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி திடீர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னபூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து (வயது 52). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், அவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகத்தில் எலும்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3-வது தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். அவருடைய மனைவி உடன் இருந்து கவனித்து வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில், நேற்று காலை பொருட்கள் வாங்குவதற்காக மணிமுத்துவின் மனைவி வெளியே சென்று விட்டார். அப்போது, ஆஸ்பத்திரியின் கழிவறைக்கு சென்ற மணிமுத்து அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றுவிட்டு திரும்பிய அவரின் மனைவி, நீண்ட நேரமாகியும் கழிவறைக்கு சென்ற கணவர் வராததை கண்டு அங்கு சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நோய் குணமாகாத விரக்தியில் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.