புறம்போக்கு நில கட்டிடங்களுக்கு எதன் அடிப்படையில் வரி மதிப்பீடு? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு செய்யப்படுகிறது? என நகராட்சி நிர்வாகத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு செய்யப்படுகிறது? என நகராட்சி நிர்வாகத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்பு நோட்டீஸ்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அபுதாகிர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனக்கு சொந்தமாக நிலம் உள்ளது. ஆனால் அந்த நிலத்தை நான் ஆக்கிரமித்ததாகக்கூறி, அதிகாரிகள் அந்த நிலத்தில் இருந்து என்னை வெளியேற்ற முயற்சி செய்கின்றனர். அந்த நிலத்திற்கு முறையாக நகராட்சி வரி செலுத்தியுள்ளேன். பட்டா மற்றும் மின் இணைப்பும் பெற்று உள்ளேன். ஆனாலும் அதையெல்லாம் நகராட்சி அதிகாரிகள் பரிசீலிக்காமல் எனக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனவே அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ரத்து நடவடிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் உரிய ஆக்கிரமிப்பு ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டது என்று தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, அந்த நிலத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். வரி வசூலித்ததற்கான ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்தார்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்றார்.
நீதிபதிகள் கேள்வி
விசாரணை முடிவில், அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் சட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், விருப்பம் போல் வரியை வசூலிக்கின்றனர். ஒருவர் ஆக்கிரமிப்பாளர் என தெரிந்த பின்பு அவரிடம் சொத்து வரியை வசூலிக்கக்கூடாது. வருவாய் ஆவணங்களின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு செய்யப்படுகிறது? என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் மாதம் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.