விதிகளை பின்பற்றாமல் ஆவின் காலிப்பணியிடங்களை நிரப்பிய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

விதிகளை பின்பற்றாமல் ஆவின் காலிப்பணியிடங்களை நிரப்பிய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது

Update: 2023-02-06 20:58 GMT


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, சுமதி உள்பட 41 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

விருதுநகர் ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டில் வெளியானது. நாங்கள் அந்த பணிகளுக்கு விண்ணப்பித்தோம். எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வில் பங்கேற்றோம். பின்னர் பல்வேறு பணிகளில் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்தநிலையில் விருதுநகர் ஆவின் பணியிடங்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் எங்களை நேரடியாக நியமித்ததாக கூறி, எங்களை அந்த பணிகளில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆவின் நிர்வாகத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, எங்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக அரசின் அரசாணையை மீறி விருதுநகர் ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார். விசாரணை முடிவில், விதிகளை பின்பற்றாமல் விருதுநகர் ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்பிய உயர் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்