ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜனதா நிலைப்பாடு என்ன? அண்ணாமலை பேட்டி

அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பலமானவர் என்றும் ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜனதா நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-01 19:39 GMT

அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பலமானவர் என்றும் ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜனதா நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமிர்தகால பட்ஜெட்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.

ஐ.எம்.எப். கணிப்பின்படி இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். நகர்ப்புற வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் கொரோனா காலத்தில் இருந்த பாதிப்பை இந்தியா தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பலமான வேட்பாளர்

தி.மு.க கூட்டணியை எதிர்க்கக்கூடிய வகையில் எங்கள் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பலமான வேட்பாளர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளனர்.

மெரினாவில் கருணாநிதியின் பேனா சிலை வைப்பதால் 13 மீனவ கிராமங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசு பேனா சிலை வைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து நேற்று (நேற்று முன்தினம்) நடந்த கருத்து கேட்பு கூட்டம் அரசு நடத்தியதா? அல்லது தி.மு.க நடத்தியதா? என தெரியவில்லை.

பேனா சிலை விவகாரம்

இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், என்.ஜி.ஓ.க்களும் சிலை வைக்க வேண்டாம் என்றே கூறியிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவாலய பணத்தில் எந்த இடத்திலும் பேனா சிலையை வைக்க ஜனநாயகத்தில் இடம் உள்ளது. ஆனால் பொது இடம் என்று வரும்போது மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும். பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களோடு கைகோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

2022 ஆகஸ்டு மாதம் இந்தியா டூடே நடத்திய ஸ்டேட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு 80 சதவீத ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே பத்திரிகை கடந்த ஜனவரி 26-ந்தேதி அன்று நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினின் இமேஜ் 44 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் இவ்வாறு எந்த முதல்-அமைச்சரும் சரிவை சந்திக்கவில்லை. அவர்களின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது, வருகிற 2024-ம் ஆண்டு கணக்கெடுத்தால் நிச்சயம் செல்வாக்கு 20 சதவீதத்துக்கு கீழ் வந்து விடும். தி.மு.க. தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களின் நிலைப்பாடு

எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளார். அவர் பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் அறிவித்தாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் குறித்து யாரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமாக இருக்காது. எல்லா தலைவர்களிடமும் பேசி இருக்கிறோம். இந்த விவகாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள், தெளிவுபடுத்துகிறோம்.

முக்கியமாக ஆளுங்கட்சியின் பணபலம், அரசியல் பலம், அரசு எந்திரத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க வேண்டு் என்பதே எங்களுடடைய நிலைப்பாடு.

நாடாளுமன்ற தேர்தல்

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல. 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் 2024 நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்