தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-01-08 09:23 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது. மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும்.

ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை. முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐ.டி. எடுத்தால் என்ன ஆவது? இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்