அடுத்த மாதம் வெளியாக உள்ள தேர்வு முடிவுகள் என்ன? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

அடுத்த மாதம் (மார்ச்) வெளியாக உள்ள தேர்வு முடிவுகள் குறித்த விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது.

Update: 2023-02-15 19:05 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளை கடந்த ஆண்டு (2022) நடத்தியது. அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும்? என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் இனி வரக்கூடிய நாட்களில் வெளியாக உள்ள தேர்வு முடிவுகள் என்ன? என்ற விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலப்பதிவேடுகள் துணை பணியில் வரும் கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்கள், தமிழ்நாடு நகர் மற்றும் திட்டமிடல் துறையில் வரும் நில அளவையாளர், உதவி வரைவாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1,112 இடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 6-ந்தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது.

இதேபோல், 16 தொழில் ஆலோசகர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவும் நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது.

குரூப்-1 தேர்வு

* கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 7 ஆயிரத்து 301 காலி இடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-4 பணிக்கான தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) வெளியாகிறது.

* குரூப்-7பி-ல் வரும் 77 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி முதன்மைத் தேர்வு, குரூப்-8-ல் வரும் 74 நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

* குரூப்-1 பதவிகளில் வரும் 95 காலி இடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வை 90 ஆயிரத்து 957 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு, அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

* 10 வனப் பயிற்சியாளர், 8 சிறை வார்டா், 217 ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகளும், அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

குரூப்-3ஏ பதவி...

* கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட 161 உதவி பிரிவு அதிகாரி இடங்களுக்கான தேர்வு, கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் நடத்தப்பட்ட 24 மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள், 64 மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாகும்.

* குரூப்-3ஏ பதவிகளில் வரும் 15 காலிப்பணியிடங்களுக்கு கடந்த மாதம் (ஜனவரி) 28-ந்தேதி நடத்தப்பட்ட தேர்வுகான முடிவு வருகிற மே மாதம் வெளியிடப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்