கல்குவாரியில் மேற்கு வங்க வாலிபர் பிணமாக மீட்பு

வேலூரில் கல்குவாரியில் மேற்கு வங்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-24 16:51 GMT

வேலூரில் கல்குவாரியில் மேற்கு வங்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார்

விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மச்சாவு

வேலூர் வள்ளலார் அய்யப்பன் கோவில் அருகே உள்ள கல்குவாரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அமீன் பாரா (வயது 35) என்பது தெரியவந்தது. அதை வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் போலீசார் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

தலையில் வெட்டுக்காயம்

அமீன்பாரா சென்னையில் வேலைசெய்து வந்துள்ளார். அவர் தனது நண்பரை பார்க்க கோவை புறப்பட்டுள்ளார். அவரிடம் கோவை செல்வதற்கான ரெயில் டிக்கெட் உள்ளது. ஆனால் அவர் எதற்காக வேலூர் வந்தார் என்பது தெரியவில்லை. அவரது தலையில் வெட்டுக்காயம் உள்ளது. அந்த காயம் கல்குவாரியில் தவறி விழுந்ததில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவருடைய சாவுக்கான காரணம் தெரியவரும் என்றனர். அவரை யாராவது கொலை செய்து கல்குவாரியில் வீசினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்