கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கடந்த ஒரு வாரத்தில் 8 மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமை உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி, வேலம்பட்டி, காவேரிப்பட்டணம், பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பாம்பு குறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின்படி வனத்துறையினர் அங்கு சென்று மலைப்பாம்பு, மற்ற வகை பாம்புகளையும் பிடித்தனர்.
அந்த வகையில் கடந்த 10 நாட்களில் 8 மலைபாம்புகள், 10 விஷ பாம்புகள், 3 சாரை பாம்புகள் பிடிபட்டுள்ளன. இதை தவிர வேப்பனப்பள்ளி சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றும் பிடிபட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வந்த 2 பச்சை கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இவை அனைத்தும் மேலுமலை, வேப்பனப்பள்ளி, மகராஜகடை காப்பு காடுகளில் விடப்பட உள்ளன என்றார்.